ஜூன் 30க்குள் ரூ.60,000 கோடி விவசாய கடன் ரத்து: ப.சிதம்பரம்!
திங்கள், 28 ஏப்ரல் 2008 (09:25 IST)
''ரூ.60,000 கோடி விவசாய கடன் ஜூன் 30ஆம் தேதிக்குள் ரத்தாகும்'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் விஜயா வங்கியின் 1052 வது புதிய கிளையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்து பேசுகையில், கடந்த டிசம்பர் முடிய 11 லட்சத்து 63 ஆயிரத்து 57 பேருக்கு ரூ.18 ஆயிரத்து 430 கோடி கல்வி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறியவர்கள் பிப்ரவரி 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 60,000 கோடி விவசாயகடன் தள்ளுபடி என அறிவித்தவுடன் எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என கேட்கிறார்கள்.
சந்தேக கண்ணோட்டத்தோடு, சந்தேகத்தை விதைத்தவர்கள் அந்த விதை முளைத்து செடியாக வளராதா? அதில் எதையாவது பறிக்கமுடியாதா? என நினைப்பவர்களுக்கு நாங்கள் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள் ஜூன் 30ஆம் தேதிக்குள் ரூ.60,000 கோடி விவசாய கடனும் ரத்தாகும் என்று ப.சிதம்பரம் கூறினார்.