விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பது‌க்கலுக்கு எதிராக நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்!

ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (11:18 IST)
''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பதுக்கல், கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் ‌வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், மக்களின் அன்றாட தேவை பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. விலைவாசி உயர்விலிருந்து ஏழை, நடுத்தர மக்களுக்கு நிவாரணம் கிடைக்க விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், பதுக்கலுக்கு எதிராகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்தியிருக்கிறது.

சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்கு இருப்பு வைப்பதில் உடனடியாக உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேல் யாரேனும் அரிசி மற்றும் சமையல் எண்ணையை இருப்பு வைத்தால் அதை பதுக்கல் என்று பிரகடனப்படுத்தி பறிமுதல் செய்ய வேண்டும். இதில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

உணவு உற்பத்தி உண்மையில் பெருக வேண்டுமானால், மானிய உதவிகளை மிக தாராளமாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை சந்தைமுறை தீர்மானிக்கின்ற தற்போதைய நடைமுறை மாற்றப்பட வேண்டும். இந்த நடைமுறை இருக்கின்றவரை விவசாய உற்பத்தி பெருகாது. விவசாய உற்பத்தியை பெருக்காமல் விலைவாசி குறையாது. சந்தை முறையில் இடைத்தரகர்களின் முறைகேடான கூட்டணியை அமைத்துக் கொண்டு விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள். இடைத்தரகர்களின் கூட்டணிக்கும் அவர்களது முறைகேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விவசாயிகளை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும்.

உணவு தானிய வர்த்தகத்தில் அய‌ல்நாட்டு தொழில் நிறுவனங்களும், இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் ஈடுபடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பெரும் தொழில் நிறுவனங்கள் முன்பேர வர்த்தகம் என்ற முறைகேடான நடைமுறையை பின்பற்றி அன்றாடத் தேவைப் பொருட்களை பெருமளவில் வாங்கி பதுக்கி வைக்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே உணவு தானிய வர்த்தகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் தடைவிதிக்க வேண்டும்.

மிக விரைவில் நடைபெற இருக்கும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு இது குறித்து ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். இதற்கிடையில், மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பதுக்கலுக்கு எதிராகவும், கடத்தலுக்கு எதிராகவும் மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்தி மக்களுக்கு உணவு பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்