தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகளின் மரணத்திற்கு தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு தான் காரணம் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட பூஜா, நந்தினி, மோகனப்ரியா, லோகேஷ் ஆகிய நான்கு பிஞ்சுகளின் உயிர்கள் தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக பறிபோய் உள்ளன. தடுப்பூசிகளை பராமரிக்கும் முறையில் ஏற்பட்டுள்ள கோளாறும், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்தியதும் தான் நான்கு குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவருகிறது.
தடுப்பூசி மற்றும் அதற்கான மருந்துகள் குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக இருந்ததா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக தடுப்பூசிகளையும், மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் மருத்துவமனைகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன.
ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்!
அண்மைக்காலம் வரை தடுப்பூசி மருந்து புனேயில் உள்ள நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 8 ரூபாய் என்ற விலைக்கு தமிழக அரசால் வாங்கப்பட்டு வந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க அரசு அதை நிறுத்தி விட்டு ஐதராபாத்தில் இயங்கும் வேறு நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 7 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த மலிவு விலை தடுப்பூசிதான் நான்கு குழந்தைகளின் உயிரை பலி வாங்கி இருக்கிறது.
பிஞ்சுக் குழந்தைகளை மரணப் படுக்கைக்கு அனுப்ப காரணமாக இருந்த தி.மு.க அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் மெத்தனப் போக்கால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் விரைவில் பூரண நலமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.