6,302 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: தங்கம் தென்னரசு!
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (11:03 IST)
''தமிழகத்தில் இந்த ஆண்டு 6,302 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழகத்தில் மாநில கல்வி வாரியம் ஒன்றை அமைத்து, அதில், மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து வகை நிர்வாகங்களின் கீழ் உள்ள பள்ளிகள் இணைக்கப்படும். அந்த பள்ளிகளில் (ஸ்டேட்போர்டு, மெட்ரிகுலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் (சிபிஎஸ்இ தவிர பயிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம், பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு தரமான சமச்சீர் கல்வி வழங்கப்படும்.
மாநில கல்வி வாரியத்துடன் பின்னர் தேர்வு வாரியமும் இணைக்கப்படும். அதன்பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் இறுதித்தேர்வின்போது 5 தேர்வுகள் மட்டும் நடக்கும் வகையில் தேர்வு முறை மாற்றப்படும். இதன்படி, இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்.
இந்த நிதியாண்டில் 1,005 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்த 1,005 பள்ளிகளுக்கு 1,005 பட்டதாரி ஆசிரியர்களும், கடந்த 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 572 பள்ளிகளுக்கு 572 ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
அரசு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை- தொடக்க பள்ளிகளில் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிக்கல்வியில் முதுநிலை ஆசிரியர்கள் 724 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 942 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 326 பேர், ஓவிய ஆசிரியர்கள் 131 பேர், இசை ஆசிரியர்கள் 44 பேர், தையல் ஆசிரியர்கள் 74 என 2,241 ஆசிரியர்களும், தொடக்கல்வியில் இடைநிலை ஆசிரியர்கள் 2,444 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 40 பேர் என 2,488 பேரும் இந்த நிதியாண்டில் மொத்தம் 6,302 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.