4 குழந்தைகள் பலி : மத்திய மருத்துவ நிபுணர் குழு தமிழக‌த்‌தி‌ல் ‌விசாரணை!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (10:10 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்ட 4 குழந்தைகள் பலியானதகுறித்து விசாரிக்க மத்திய மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக‌த்‌தி‌ல் நட‌‌த்த உ‌ள்ளது எ‌ன்று மத்திய சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் அன்புமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழக‌த்‌தி‌ல் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தட்டம்மை தடுப்பு ஊசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில், கச்சூர் அருகே உள்ள பென்னலூர் பேட்டை கிராமத்தை சேர்ந்த 3 குழந்தைகளும், பூனிமாங்காடு அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு குழந்தையும் பரிதாபமாக பலியானார்கள்.

ஐதராபாத்தில் உள்ள `இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' என்ற நிறுவனத்தில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து தடுப்பு ஊசி போடும் பணியை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சம்பவம் குறித்து கவலை அடைந்த மத்திய சுகாதார மந்திரி அன்புமணி, டெல்லியில் நேற்று அமைச்சக அதிகாரிகளின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் சுகாதார துறை செயலாளர் நரேஷ் தயாள், சுகாதார துறை இயக்குனர் ஜெனரல் ஸ்ரீவத்ஸவா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அ‌ன்பும‌ணி உ‌த்தரவு!

அப்போது அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவ நிபுணர் குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க மத்திய மந்திரி அன்புமணி உத்தரவிட்டார்.

அதன்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தொற்றுநோய் நிறுவனம், சுகாதார சேவை இயக்குனர் ஜெனரல், இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தமிழகம் வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த பகுதிகளில் அவர்கள் விசாரணை நடத்துவார்கள்.

மேலும் குளிரூட்டப்பட்ட நிலையில் மருந்தின் தன்மை, நீர்த்தல் தன்மை, ஊசி போடப்பட்ட விதம், ஊசி போடுவதில் மரு‌த்துவ‌ர்க‌ள், செ‌வி‌லிய‌ர்களின் நிர்வாக தவறுகள் உட்பட பல்வேறு ‌விடயங்கள் குறித்து அந்த குழு ஆய்வு நடத்தும். இது தவிர தமிழக அரசு அதிகாரிகளுடனும் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள். விசாரணை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு மத்திய குழுவுக்கு அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.

மரு‌ந்துக‌‌ள் ஆ‌ய்வு!


இது தவிர, குழந்தைகள் பலி குறித்த விசாரணை நடத்தும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார மையத்தின் தேசிய போலியோ கண்காணிப்பு திட்ட நிபுணர்கள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் மாதிரிகள், கவுசாலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு தர ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், ஐதராபாத்தில் உள்ள `இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' நிறுவனம் (ஐ.ஐ.எல்.) தயாரித்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நிறுவனம் தட்டம்மை தடுப்பு ஊசி மருந்துகளை தயாரித்து வினியோகிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இ‌ந்‌தியா முழுவது‌ம் தடை!

டெல்லியில் சுகாதார துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு மத்திய அமை‌ச்ச‌ர் அன்புமணி செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ஐதராபாத்தில் உள்ள `ஐ.ஐ.எல்.' நிறுவனத்துக்கு 90 லட்சம் ூனிட் தடுப்பூசி மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதில், 45 லட்சம் ூனிட் இதுவரை `சப்ளை' செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த நிறுவனம் வினியோகம் செய்துள்ள அனைத்து தடுப்பூசி மருந்துகளையும் பயன்படுத்த தடை விதித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய மருத்துவ நிபுணர் குழு, தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அந்த குழு தனது அறிக்கையை அளிக்கும்.

அதுபோல, தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்துகளின் மாதிரிகள் கவுசாலியில் உள்ள மருந்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பரிசோதனை முடிவு பற்றி இரண்டு வாரத்துக்குள் அறிக்கை கிடைக்கும். அதன் பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் அன்புமணி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்