விவேகானந்தர் இல்லத்தை கையகப்படுத்தும் திட்டமில்லை- கருணாநிதி!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:27 IST)
சென்னை கடற்கரைச் சாலையில் ஐஸ் ஹவுஸ் என்றழைக்கப்படும் பழமையான கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் இல்லத்தை கையகப்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்களின் மீது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, விவேகானந்தர் இல்லம் இருக்கும் அந்த கட்டடத்தை கையகப்படுத்துவதாக எந்தவித அறிவிக்கையோ அல்லது கடிதமோ ஸ்ரீ இராமகிருஷ்ணா மடத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவில்லை என்று கூறினார்.

விவேகானந்தர் இல்லமிருக்கும் அந்த பழமை வாய்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு தமிழ் செம்மொழி மையம் அமைக்கப்படவுள்ளதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கருணாநிதி, மெரீனாவில் உள்ள பாலாறு இல்லத்தில் தமிழ் செம்மொழி மையம் தற்காலிகமாக இயங்கும் என்றும், பெருங்குடியில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டடத்திற்கு பிறகு அம்மையம் மாற்றப்படும் என்றும் கூறினார்.

“தமிழ் செம்மொழி மையம் இயங்குவதற்கு கட்டடம் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, அரசுக்கு எதிரான சில சக்திகள் தனக்கும், இராமகிருஷ்ணா மடத்திற்கும் பிளவை உண்டாக்க, 27,456 சதுர அடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்தப்போவதாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ள” என்று கருணாநிதி கூறினார்.

“சிகாகோ நகரில் நடந்த ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு 1897ஆம் ஆண்டு நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், சென்னைக்கு வந்து 9 நாட்கள் தங்கியிருந்த அந்த கட்டடம் வலிமையானது என்பது மட்டுமின்றி, இடித்துத் தள்ளக்கூடிய அளவிற்கு அது சாதாரண கட்டடமா என்ன?” என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

விவேகானந்த‌ர் இல்லத்தை மாற்றுவதற்கு அரசு முயன்றால் அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வது என்று இராமகிருஷ்ணா மடத்தினர் ஆலோசித்து வருவதாக செய்திகள் வந்துள்ளனவே என்று உறுப்பினர்கள் கூறியதற்கு பதிலளித்த கருணாநிதி, இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களைப் பற்றியெல்லாம் அரசு கவலைப்படாது என்றும் அதனை சட்டபூர்வமாக சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார்.

“ஆனால் சாதுக்க‌ள் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை விடுப்பது சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஆகியோரது த்த்துவங்களுக்கு எதிரானது என்று கூறிய கருணாநிதி, “விவேகானந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோரது கருத்துகள் பகுத்தறிவை போதித்த சமூக சீர்திருத்தவாத தலைவர் பெரியார், முன்னாள் முதலமைச்சர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு ஒத்திருந்தது, விவேகானந்தருக்கு நாங்கள் எதிரியல்ல” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்