தமிழகம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணில் அவசர ஊ‌‌ர்‌தி சேவை: அமை‌ச்ச‌ர் பன்னீர்செல்வம்!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (10:05 IST)
''த‌மிழக‌ம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணில் அவசர ஊ‌ர்த‌ி சேவை தொடங்கப்படும்'' என்று சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:

கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற வருமான சான்றிதழ் பெற வேண்டும் என்பதை தளர்த்தி, அந்த கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் கிராம சுகாதார செவிலியர் பரிந்துரை செய்தாலே நிதி உதவி வழங்கப்படும்.

சிவகங்கை, பெரம்பலூ‌ரி‌ல் மரு‌த்துவ க‌ல்லூ‌ரி!

சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆண்டு 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 10 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்படும். வேலூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.

மாநிலம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவசர ஊ‌ர்‌தி சேவையை இலவசமாக பெறுவதற்கான புதிய திட்டம் இந்த ஆண்டில் தொடங்கப்படும். க‌ணி‌னி மயமாக்கப்பட்ட மைய கட்டுப்பாட்டு அறை, இடம் அறியும் ஜி.பி.எஸ். கருவிகள் இந்த ஆம்புலன்சில் இருக்கும்.

139 நடமாடு‌ம் மரு‌த்துவமனைக‌ள்!

இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துகளில் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் கொண்ட சிறப்பு மையம் ஒன்று, மத்திய அரசின் நிதி உதவியுடன் சென்னையில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களுக்காக இந்த ஆண்டு 139 நடமாடும் மரு‌த்துவமனைக‌ள் தொடங்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்