இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: பேரவையில் தீர்மானம்!
புதன், 23 ஏப்ரல் 2008 (16:22 IST)
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிறிலங்க அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை இனப் பிரச்சனைத் தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர் கோ.க. மணி கொண்டுவந்தார். இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பா.ம.க), கண்ணப்பன் (ம.தி.மு.க) ஆகியோர் பேசினார்கள்.
கோ.க. மணி தெரிவித்த சில கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவர் சுதர்சனம், அவைகளை பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதேபோல உறுப்பினர் கண்ணப்பன் தெரிவித்த சில கருத்துக்களையடுத்து காங்கிரஸ் - ம.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடுமையான விவாதம் நடந்தது.
விவாதங்களுக்கு பதில் அளித்து இறுதியாக பேசிய முதலமைச்சர் கருணாநிதி, "இந்த தீர்மானத்தை பரிவுணர்வு, இரக்க சிந்தனை, தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்ற பாச மனப்பான்மையோடு கொண்டு வந்து அதே அடிப்படையில் விவாதம் நடத்தி நிறைவேற்றி இருந்தால் நமக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்திருக்கும். எந்த நோக்கத்தோடு இந்த தீர்மானத்தை கொண்டு வந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தை பிரயோகம் அமைந்ததால் வருத்தப்படுகிறேன்.
இந்த அவையை இந்திய பேரரசின் நிர்வாகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நிறைவேற்றும் தீர்மானம் இந்திய அரசின் ஆணிவேரை அகற்றிடும் வகையில் இருக்கக் கூடாது. இந்திய இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு எதிராக அமைந்து விடக்கூடாது. கண்ணப்பனுக்கும், சுதர்சனத்துக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துக்களால் கண்ணப்பன் இங்கு உணர்ச்சி வசப்பட்டார்.
இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு சாதகமாகவோ, தூண்டு கோலாகவோ இருக்கிறது என்ற கருத்தில் அவர் பேசியது நான் எதிர்பார்க்காதது. கண்ணப்பன் தீவிரமாக சிந்தித்து துடுக்காக பேசக் கூடியவர். ஆனால் கடுப்பாக பேசிவிட்டார். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் கருத்து மாறுபாடு இல்லை. இலங்கையில் செல்வா காலத்தில் இருந்தே உரிமை போராட்டம் தொடங்கி விட்டது. அறவழியில் போராடி பயனற்றுபோன பிறகு அவரது வழித் தோன்றல்கள் போராளிகளாக மாறினார்கள். ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்காக நாம் பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது.
இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடை பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள். அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றூண்டி வழங்கி தேனீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாக கிடந்தார்கள்.
போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள். போராட்டம் வெற்றி பெறவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் சிங்கள ராணுவம் ஏறி மேய்க்கிறது. இருப்பினும் தாங்கி பிடிக்கும் தாய் உள்ளம், தொப்புள் கொடி உறவு இருப்பதால் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்திய அரசை குறை சொல்லிப் பயன் இல்லை. இந்த காரணத்துக்காகவே ராஜீவ் காந்தி உயிரை இழந்தார். அந்த குடும்பத்தில் இன்னும் மனித நேயம் இருக்கிறது என்பதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கின்றன. வேலூர் சிறைச்சாலை சம்பவமாகட்டும், சோனியா மன்னிப்பு வழங்கிய சம்பவமாகட்டும், அவர்களிடம் மனித நேயம் குடி கொண்டு இருப்பதை கண்கூடாக காண்கிறாம். அந்த மனித நேய அடிப்படையில் இந்த தீர்மானத்தை எண்ணிப்பார்த்து அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
அதன் பின்னர் முதலமைச்சர் வாசித்த தீர்மானத்தில், "இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கிடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு அமைதி ஏற்படுத்த அரசியல் தீர்வுகாணும் வகையில் பயனுள்ள பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும். இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்" என்று முதல்வர் கூறினார்.
இதை காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம், பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் ஆகியோர் ஏற்பதாக வழி மொழிந்தனர். பின்னர் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.