தில்லையாடி வள்ளியம்மையை இழிவு படுத்துவதா? ஜெயலலிதா க‌ண்டன‌ம்!

புதன், 23 ஏப்ரல் 2008 (13:53 IST)
சுதந்திரப் போராட்ட வீராங்கனையை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படத்தில் பாடல் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எ‌ன்று அ.இ.அ.‌த‌ி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், 'குருவி’ என்ற திரைப்படத்தில் தில்லையாடி வள்ளியம்மையை இழிவு படுத்தும் விதமாக ஒரு பாடலை இடம் பெறச் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் விதமாக திரைப்படத்தில் பாடல் இடம் பெற்றிருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படத்தில் பாடல் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தேசிய உணர்வு கொண்ட அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயலாகும். 'குருவி' படத்தின் ஒலி நாடா வெளியிட்ட பின்பு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம் பெறாது என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

பாடல் எழுதும் போதே இதனை சிந்தித்திருக்க வேண்டும். எதிர்ப்பு வந்தவுடன் அதற்காக வருத்தம் தெரிவிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மெட்டுக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சரித்திரப் புகழ் பெற்றவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும், தமிழுக்காகப் பாடுபட்டவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவது வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்