விலைவாசி குறையும் வரை போராட்டம் தொடரும்: கம்யூனிஸ்டுகள் அறிவிப்பு!
புதன், 23 ஏப்ரல் 2008 (09:52 IST)
''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதவரை கம்யூனிஸ்டு கட்சிகளின் போராட்டம் தொடரும்'' என்று அந்த கட்சிகளின் மாநில செயலாளர்கள் தா.பாண்டியன், என்.வரதராஜன் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக விலைவாசி உயர்வு பற்றி எச்சரித்து வருகிறோம். சில மாதங்களாக தாங்க முடியாமல் அளவுக்கு விலைவாசி உச்சநிலைக்கு வந்துவிட்டது.
இந்தியாவில் எந்த பொருளும் விளையவில்லை. இதனால் பற்றாக்குறையால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று சொல்வதை ஏற்க முடியாது. எந்த பொருளும் இந்தியாவில் இல்லை என்ற நிலைமை இல்லை. வாங்கும் சக்தி அதிகரித்ததால் விலை உயர்ந்ததாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
ஆறரை கோடி தமிழர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்திருந்தால், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏன் கடவுசீட்டு இல்லாமல் ஓடவேண்டும். விலைவாசி குறையும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று தா.பாண்டியன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் என்.வரதராஜன் பேசுகையில், மாநில அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வுக்கு எதிரான இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. தெருத்தெருவாக, வீதி வீதியாக, மண்டலம் மண்டலாக போராடுவோம்.
தேவைப்பட்டால் ரெயில் போக்குவரத்தை கூட நிறுத்தும் போராட்டம் நடத்துவோம். விலைவாசி குறையும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று என்.வரதராஜன் எச்சரிக்கை செய்தார்.