சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முதலமைச்சர் கருணாநிதிக்கு, மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் எழுதிய கடிதத்தில் புதுடெல்லியில் நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் தேசிய மாநாட்டில் கலந்து தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 68 பிரதிநிதிகள் கொண்ட குழுவின் பட்டியலை தமிழக அரசு பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு 20-3-08 அன்று அனுப்பியது. இதன் இடையே பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பாக ஒரு வரைவு சாசனம் தயாரிக்கப்பட்டு தேசிய மாநாட்டில் நிறைவேற்றிய பின் பிரதமரிடம் அளிக்கப்பட உள்ளதாக தெரியவந்தது.
இந்த வரைவு சாசனம் மாநில அரசையோ, அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களையோ கலந்து ஆலோசித்து தயாரிக்கப்படவில்லை. மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை சுயமாக தெரிவிக்க வேண்டுமே தவிர பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பாக தயாரிக்கப்பட்ட சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது தவறான நடைமுறை ஆகும்.
எனினும் மாநாடு இன்று தொடங்குகிற நிலையில் போதிய கால அவகாசம் இல்லாததால் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகளை அனுப்ப இயலாத நிலை உள்ளது. உள்ளாட்சிகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வதிலும், கூடுதல் நிதி ஒதுக்குவதிலும் நாட்டிலேயே தமிழக அரசு முன்னிலையில் உள்ளது. ஆகவே இந்த கூடுதல் அதிகாரங்களை மாநில அரசின் அதிகாரங்களை விட்டுக்கொடுத்துதான் வழங்க வேண்டும் என்ற நிலை அரசுக்கு ஏற்றதில்லை.
வரைவு சாசனத்தின் ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் குறித்து தமிழக அரசின் நிலையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இதற்கு பதில் அளித்து கடிதம் எழுதிய பிரதமருக்கு இந்த அவையின் வாயிலாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.