இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று (23.4.2008) உலகப் புத்தகத் திருநாள். “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று சின்னஞ் சிறுவர்களும் உணரும் வண்ணம் கல்வி நெறியைக் கைக்கொண்டவர்கள் தமிழர்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே ஏன் கற்க வேண்டும்? எப்படிக் கற்க வேண்டும்? என்றெல்லாம் வினாத் தொடுப்பதோடு நின்று விடாமல் விடையையும் கூறிச் சென்றுள்ளனர்.
“கற்க கசடற” என்றார் அய்யன் வள்ளுவர். தன்னிடமுள்ள கசடு போகவும், சமுதாயத்தில் நிலவும் கசடு போக்கவும் கற்க கசடற என்றார். மக்களிடம் படிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும். படிப்பது அறிவுக்காக மட்டுமன்று. “எழுத்தறியத் தீரும் இழிதகைமை” என்றார்கள். நம் தன்மானத்தை நாமே உணரவும், காக்கவும் எழுத்தறிவு பெருக வேண்டும்.
எனவே, பொது நூலகங்களுக்கு ஒவ்வொரு நூலிலும் 1000 படிகளை வாங்கவும், அரசு நிகழ்ச்சிகளில் நூல்களைப் பரிசாக வழங்கவும், தமிழ் வளர்ச்சித் துறை வழியாக ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஆண்டுதோறும் வெளிவரும் சிறந்த நூலுக்கு இருபதாயிரம் ரூபாய் என்றும், வெளியிட்ட பதிப்பகத்தார்க்கு 5000 ரூபாய் என்றும், 31 வகைப்பாடுகளுக்கும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கவும், ஊராட்சிகளில் நூலகங்கள் அமைக்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.
உலகப் புத்தகத் திருநாள் விழாவைத் தமிழ் வளர்ச்சித் துறையும், பொது நூலகத் துறையும், தென்னிந்தியப் பதிப்பாளர் சங்கமும் இணைந்து வாசகர்களோடும், எழுத்தாளர்களோடும் கொண்டாடுவதற்குப் பாராட்டுகள். எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தார்க்கும், வாசகர்களுக்கும் இந்த நாளில் என் இனிய வாழ்த்துகள். “கற்க கசடற” என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.