விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர் சஞ்சய் அரோரா கூறினார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ளது பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் 12 வது விளையாட்டு விழா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் சண்முகம் வரவேற்றார். விளையாட்டு துறை பொறுப்பாளர் பேராசிரியர் சாண்ட்ரா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். விழாவிற்கு கல்லூரி இயக்குனர் டாக்டர் சுந்தரராமன் தலைமை தாங்கி பேசினார்.
விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர் சஞ்சய் அரோரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், கல்லூரி பருவம் என்பது வாழ்க்கையில் மறக்கமுடியாத திரும்பவும் வராத காலங்கள்.
இந்த காலங்களில் நம் அனுபவங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆப்பிரகாம் லிங்கன் தன்னுடைய 21 ஒன்றாவது வயதில் தொடங்கி பல்வேறு தடை, தோல்விகளை சந்தித்தார். இருந்தாலும் தன் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் 52வது வயதில் சாதித்தார். இவரை உதாரணமாக கொண்டு வாழ்க்கையில் எந்த சூழலிலும் விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம் என்றார் சஞ்சய் அரோரா.
முடிவில் தகவல் தொழில்நுட்பதுறை இறுதி ஆண்டு மாணவர் ஆனந்த் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.