''பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு 20 விழுக்காடு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாற்றியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு நாகர்கோவிலில் நேற்ற செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினோம். பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.
பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு 20 விழுக்காடு உயர்வு ஏற்பட்டு உள்ளது. பட்ஜெட் அறிவித்த 3-வது நாள் சிமெண்டு விலை ரூ..250 ஆனது. விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை. வாங்கும் சக்தி மக்களிடம் அதிகரித்து உள்ளது என்று மத்திய அமைச்சர்கள் சொல்கிறார்கள். அது பொய்.
ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை தேக்கி வைத்து, செயற்கையாக விலை நிர்ணயம் செய்து வர்த்தக சூதாட்டம், யூக பேரம் நடத்துகிறார்கள். இதை தடுக்க மத்திய அரசு முயற்சி எடுக்காமல் இருந்தது. இவ்வளவு போராட்டம் நடத்தியபிறகுதான் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆன்லைன் வர்த்தகம் கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
பதுக்கல், யூக பேரத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும். விலைவாசி உயர்வு பிரச்சினையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை எப்போது வாபஸ் வாங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று நல்லகண்ணு கூறினார்.