கொடைக்கானல் மலையில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!
சனி, 19 ஏப்ரல் 2008 (17:08 IST)
கொடைக்கானல் மலைப் பகுதியில் தனிப்படைக் காவலர்களுக்கும் மவோயிஸ்ட்டுகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், குண்டு காயத்துடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சத்தீஷ்கர், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தமிழகத்தில் தேனி, பெரியகுளம், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைக்காடுகளில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்ததன் பேரில், தேனி மாவட்டம் வருஷநாடு மலைப் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பேர் பிடிபட்டனர். 10க்கும் மேற்பட்டவர்கள் தப்பிவிட்டனர்.
இந்நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள கும்பரை, பண்ணைக்காடு, சோத்துப்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாகத் தனிப்படைக் காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பண்ணைக்காடு பகுதியில் காவல்துறையினர் நேற்றுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் காவலர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
இதில் மாவோயிஸ்ட் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட நக்சலைட் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்று தெரியவந்தது.
காயமடைந்தவர்கள் மற்றும் தப்பி ஓடியவர்களின் பெயர் விவரங்களைத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.