மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்!
சனி, 19 ஏப்ரல் 2008 (12:52 IST)
மதுரை மாநகரின் பெருமை மிகுந்த திருவிழாவான சித்திரைத் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக கண்டாங்கிப்பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் கோயில் சுந்தரராஜ் பெருமாள் கோயிலில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு அழகர் புறப்பட்டார்.
அப்போது 18-ஆம் படி கருப்பணசாமி சன்னதி முன்பு உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழி நிகழ்ச்சியும் கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று வாணவேடிக்கை முழங்க மதுரை நோக்கிப் புறப்பட்டார் அழகர்.
அங்கிருந்து, ஒரு வாரத்துக்கான உடைகள், தங்க நகைகள், 26 காணிக்கை உண்டியல்கள் மற்றும் பக்தர்கள் புடைசூழ பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு 10.30 மணியளவில் வந்தார்.
சீனிவாசன கல்யாண பெருமாள் சன்னதி முன்பு 16 தூண் மண்டபத்தில் எழுந்தருளிய அழகர் அங்கிருந்து கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரை நோக்கிப் புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு மூன்று சாவடிக்கு வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து சேவித்து நகருக்குள் அழைத்துவரும் எதிர்சேவை துவங்கியது.
இன்று இரவு 11 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வரும் கள்ளழகருக்கு விடிய விடிய எதிர்சேவை நடக்கிறது. பிறகு நாளை அதிகாலை 2.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி சன்னதி முன்பு உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கிருந்து 3 மணிக்குப் புறப்படும் கள்ளழகர் காலை 7.05 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசிக்கின்றனர். ஆற்றில் பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் கள்ளழகர், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.