உயர் வருவாய் பிரிவுக்கும் இடஒதுக்கீடு: திமுக!

சனி, 19 ஏப்ரல் 2008 (10:23 IST)
சென்னை: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முறையில், உயர் வருவாய் பிரிவினரையும் சேர்ப்பதற்காக திமுக சட்டரீதியாக போராடும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் வருவாய் அதிகம் உள்ளோருக்கு இடஒதுக்கீடு இல்லை எனக் கூறுவது, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கு இடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்க வழி வகுத்துவிடும்.

எனவே, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு ஏதுவாக அனைத்து முயற்சிகளையும் சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமை என்றும், இதில் கிரீமி-லேயர் கொள்கையை புகுத்தி பாரபட்சம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணிப்பதையோ, பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்குவதையோ ஏற்றுக் கொண்டதில்லை என்றும், கிரீமிலேயர் கொள்கையை நீக்கி இந்த ஆண்டே 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்