கிரீமி லேயரை நீக்க உச்ச நீதிமன்றத்தை தி.மு.க. அணுகும் – கருணாநிதி!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (20:00 IST)
செ‌ன்னை: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிலிருந்து, பிற்படுத்தப்பட்டோரிலுள்ள வசதி படைத்தோரை (கிரீமி லேயர்) நீக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தி.மு.க. அணுகும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி கூறினார்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு இணங்க, பிற்படுத்தப்பட்டோரிலுள்ள வசதி படைத்தோரை நீக்கி, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துவிட்ட நிலையில், சென்னையில் இன்று தி.மு.க. உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கிரீமி லேயர் என்ற பாகுபாட்டை ஏற்காமல் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தினால் அதனை தி.மு.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கும் என்று கூறினார்.

ஆயினும், “சால்வையை (கிரீமி லேயர்) தராமலேயே சட்டையை (இட ஒதுக்கீடு) மட்டுமே தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டு சால்வையையும் கேட்போம” என்று கூறினார்.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வசதி படைத்தோர் என்ற கொள்கையை தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது என்றும், அதனை நீக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கருணாநிதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்