திரைப்பட நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான தேனி குஞ்சரம்மாள் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 80. அவரது இறுதிச்சடங்கு இன்று காலை கே.கே.நகரில் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் பிறந்த குஞ்சரம்மாள், நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பிரபலமானவர். இயக்குனர் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர், 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உட்பட 60க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நாட்டுப்புறப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கே.கே.நகரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி குஞ்சரம்மாள், நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இவரது உடல் கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணியளவில் கே.கே.நகரில் உள்ள சுடுகாட்டில் இவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி குஞ்சரம்மாள் மறைவையொட்டி பல்வேறு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா இரங்கல்: திரைப்பட நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான தேனி குஞ்சரம்மாள் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
நடிகை குஞ்சரம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.