சட்டப் பேரவையில் இல்லாதவர்களை பற்றி விமர்சிப்பதா? இல.கணேசன் கண்டனம்!
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (09:46 IST)
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்டு கட்சிகளை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு, அவையில் இல்லாத பா.ஜ.க.வை பற்றி பேசுவதா? என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். தாங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கும் அரசுக்கு எதிராக அவர்கள் நடத்தும் எந்த நடவடிக்கையும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை பெறாது.
இந்த வெளிநடப்பில் அதிர்ச்சி அடைந்த தமிழக முதலமைச்சர், மதவாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றும் அத்வானி யாத்திரை குறித்தும் பா.ஜ.க.வின் பெயர் குறிப்பிடாமல் கடும் சொற்களால் விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே இந்த மதவாதிகள் ஆட்சியில் இருந்த போது ஆட்சியின் பலனை உடன் இருந்து தி.மு.க. அனுபவித்த போது இவர்கள் மதவாதிகள் என்பது தெரியவில்லையா? அதற்கு முன்பாக காந்திஜி கொலை நடைபெற்றுள்ளது என்பது தெரிந்தும் அப்போது கூட்டணி வைத்தது சந்தர்ப்பவாதமா?
அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையை அவருக்கு வந்துவிட்டதன் காரணமாக அச்சத்தின் வெளிப்பாடு தான் இந்த பேச்சா?
மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் என யாரை குறிப்பிடுகிறார்? என்பதை சட்டப்பேரவைக்கு வெளியே பகிரங்கமாக பேசி வழக்கை எதிர்கொள்ள தயாரா? வெளிநடப்பு செய்தது கம்யூனிஸ்டுகள். அவர்களை விமர்சனம் செய்ய துணிவில்லாமல் அவையில் இல்லாதவர்களை குறித்து விமர்சனம் செய்வதா? என்று இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.