சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி எழுந்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சனையில் கிரீமிலேயர் எனப்படும் வசதிப்படைத்தவர்களை நீக்கக்கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக செய்திகள் வந்துள்ளன. டி.ஆர்.பாலுவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று ஜி.கே.மணி கூறினார்.
கிரீமிரலேயர் விடயத்தில் அவசரம் கூடாது!
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறுகையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இடஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறி, அது செய்தியாக வந்திருந்தால் அது தவறாகும். இது பற்றி ஏப்ரல் 18ஆம் தேதி தி.மு.க.வின் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்ய உள்ளது.
இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயரை நீக்கக்கூடாது என்பது தான் எங்களுடைய கொள்கையாகும். கிரீமிலேயரை எப்படி உடைப்பது என்பது குறித்து, தோழமைக்கட்சி தலைவர்களுடனும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். எதிர்கால சந்ததியினரை காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே இந்த விடயத்தில் அவசரம் கூடாது. பொறுமை நிச்சயம் வேண்டும்.
நாடு காடாகி விடும்!
விலைவாசி உயர்கிற நேரத்தில் வாங்கும் சக்தி அதிகமானால், விலை வாசியின் கனம் தெரியாது, சுமை தெரியாது என்பது ஒரு பொருளாதாரக் கணக்கு. எவ்வளவு தான் விலைவாசி உயர்ந்தாலும் அது தேர்தலிலே பயன்படுத்துவதற்குத் தான் உதவுமே தவிர, அந்த உயர்வினால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். ஆனால் அதைச் சமாளிக்க வாங்கும் சக்தியை நாம் உயர்த்த வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். இந்தியாவில் எது வரக் கூடாது என்று கருதுகிறோம். எது ஆதிக்கத்தைக் கைப்பற்றக் கூடாதென்று கருதுகிறோம். மத வாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. மதவாத சக்திகளுக்கு இடம் தரக்கூடாது, மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானி அவர்களின் புயல்வேகச் சுற்றுப்பயணம் என்றெல்லாம் நாட்டிலே ஏற்பட்டால், நாடு காடாகி விடும்-காடாகாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அந்தப் பெரும் கடமை நமக்கு இருக்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.