சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், கடந்த 2 ஆண்டுகளில் ஊராட்சி, நகராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புறங்களுக்கும், ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியில் மகளிர் அமைப்புகள் சிறப்பாக செயல்பட அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த திட்டம் இந்தியாவின் மிகப் பெரிய குடிநீர் திட்டம்.
முதலமைச்சர் இந்த திட்டம் பற்றி குறிப்பிடும் போது ஒருவேளை ஜப்பான் நிதி கிடைக்காவிட்டாலும் அரசே ஏற்று செயல்படுத்தும் என்று கூறி உள்ளார். அந்த அளவு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அட்ட வணையையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். எந்த காரணம் கொண்டும் ஒகேனக்கல் திட்டம் தாமதமாகாது. சென்னைக்கு கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.