''சென்னை நகருக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடப்பாண்டில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகரின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கவும் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டம் தண்ணீர் தயாரிக்க சென்னைக்கு வடக்கே மீஞ்சூர் அருகே காட்டுப் பள்ளி கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு மே மாதத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் லிட்டரும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து 100 மில்லியன் லிட்டரும் குடிநீர் வழங்க சென்னை வாட்டர் டிசாலினேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இப்பணிகள் நடப்பாண்டில் முடிக்கப்பட்டு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதேபோல கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி கிராமத்தில் மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.