''சென்னையை குடிசைகளற்ற நகரமாக மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.814.85 கோடி செலவில் 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு 1 லட்சம் பேர் வாழும் வகையில் ஓர் ஒருங்கிணைந்த நகரம் அமைக்கப்படும்'' என்று வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
வருவாய்த்துறை, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீட்டு வசதி தேவைகளை நிறை வேற்றும் வகையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரம் குடியிருப்புகளை கட்டுவதற்கு சென்னை, கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூட்டு முயற்சியாக திட்டங்கள் உருவாக்கப்படும்.
இதில் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17 ஆயிரம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். இந்த குடியிருப்புகளில் குறைந்த வருவாய் மற்றும் மத்திய வருவாய் பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பட்டினப்பாக்கத்தில் புதிய நகரியம்!
பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்துள்ள அரசு குடியிருப்பை அகற்றிவிட்டு அங்கு சர்வதேச தரம் வாய்ந்த புதிய நகரியம் ஒன்று அமைக்கப்படும். அதில் குடியிருப்போர் மாற்றுக்குடியிருப்புகளை கோரினால், அவர்களுக்கு செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வழங்கப்படும். நடப்பாண்டில் 50ஆயிரம் விற்பனை பத்திரங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் வழங்கப்படும்.
சென்னையை குடிசைகளற்ற நகர மாக்குவதற்கு 2013ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 814.85 கோடி ரூபாய் செலவில் 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த நகரம் ஒரு லட்சம் பேர் வாழும் வகையில் அமைக்கப்படும். இதில் பள்ளிக்கூடம், சமுதாய கூடம், பூங்கா உள்பட அனைத்து வசதிகளும் இடம்பெறும்.
குடிசைப்பகுதி மக்களை நகரங்களுக்கு அருகே குடியமர்த்தும் வகையில் நிலப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 7 அடுக்குகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் மின்தூக்கி வசதியுடன் அமைக்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறினார்.