காட்டுப்பள்ளி‌யி‌ல் ரூ.3,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:06 IST)
திருவ‌‌ள்ளூ‌ர் மா‌வ‌ட்ட‌ம், கா‌ட்டு‌ப்ப‌ள்‌‌ளி‌யி‌ல் ரூ.3,000 கோடி‌யி‌ல் க‌ப்ப‌ல் க‌ட்டு‌‌ம் தள‌ம் அமை‌க்க‌ப்படு‌கிறது. இத‌ற்கான ஒ‌ப்ப‌ந்த‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் இ‌ன்று கையெழு‌த்தானது.

இது கு‌றி‌‌த்து தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்‌பி‌ல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் (டிட்கோ) லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.3068 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த ஒருங் கிணைந்த கப்பல் தளம் மற்றும் தனித்துறைமுக வளாகம் ஒன்றினைக் கூட்டுத்துறையில் அமைக்க உள்ளனர். இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் உருவாகும்.

இந்த கப்பல் தளம் மற்றும் தனித்துறைமுக வளாகத்தில் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், திரவ எரிவாயு மற்றும் எரி வாயு ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் தனித்திறன் கொண்ட கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், கடற்படைக்குத் தேவையான போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கலங்கள் ஆகியவை வந்து செல்லும் வசதிகள் அமை‌க்க‌ப்படு‌ம்.

பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற உபகரணங்களுடன் கூடிய மேடை வசதிகள், வணிக மற்றும் போர்க் கப்பல்களைச் செப்பனிடுதல் மற்றும் மாற்றியமைக்கும் பணிகளுக்கான வசதிகள், கப்பல் கட்டுமானத்திற்குத் தேவையான கனரக இயந்திர கட்டமைப்புகள், பாகங்கள் மற்றும் துணைப் பொருட்கள் தயாரிப்பு வசதிகள் ஆகியவற்றோடு கூடிய முழு அளவிலான ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட பிரிவுகள் உருவாக்கப்படும்.

இத்திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளை டிட்கோவும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து செய்து வருகின்றன. கட்டுமானப் பணிகள் இ‌ந்த ஆ‌ண்டு இறுதிக்குள் தொடங்கப்பட்டு அதன் பின்னர் 24 மாதங்களில் முடிவடையும்.

முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராமசுந்தரம், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் குழும உறுப்பினர் மற்றும் தலைவர் (கட்டுமானப் பணி) ரங்க சுவாமி ஆகியோர் கையெழுத்திட்டனர் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்