சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இதனை திரும்ப பெற்றுக் கொண்டது.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் ராமர் பாலத்திற்கு சேதம் விளைவிக்காமல் சேது சமுத்திர திட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இடைக்காலத் தடை பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. இதில், சேது சமுத்திரத் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு தீர்மானித்த பாதையிலேயே திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியிருந்தது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதிர் தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதி தள்ளி வைத்தது.
அதன் படி இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால தடையை விலக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தடையை நீக்க தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு மறுத்து விட்டது.
இந்த வழக்கில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் வேணுகோபால், சாமியார்கள் சார்பில் அருண் ஜெட்லி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.