விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க இன்று முதல் 45 நாட்கள் தடை!
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (11:13 IST)
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (15 ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தால் மீன்களின் இனப்பெருக்கம் தடைபட்டு, மீன் இனம் அடியோடு அழிந்துவிடும்.
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடை உத்தரவு அடுத்தமாதம் மே 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவால் சின்னமுட்டம், நீரோடி, கொல்லங்கோடு, தூத்தூர், இரையுமன்துறை, தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம், மணக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, மண்டபம், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காசிமேடு பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது.