ஒகேனக்கல்: தமிழக உரிமையை எந்த நிலையிலும் விட்டுத்தர மாட்டோம்! ஜி.கே.வாசன்
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (10:13 IST)
''ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமையை எந்த நிலையிலும், யாருக்காவும் விட்டுக் தர மாட்டோம்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் மத்திய திட்ட அமலாக்கம் மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுக்க, பல்வேறு சலுகைகள், விதி விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் பண வீக்கம் அதிகரித்திருப்பது விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம் என்றாலும், இந்தியாவில் மக்களை பாதிக்காத அளவுக்கு அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் விவகாரங்கள் மக்களின் உயிர்நாடி பிரச்சனைகளாகும். இந்த பிரச்சனையில் காங்கிரஸ் என்றைக்கும் தமிழக மக்களுக்கு குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. தமிழக மக்களின் உரிமையை எந்த நிலையிலும், யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
அதே நேரத்தில் சகோதரத்தும், அண்டை மாநில நட்பையும் கடைபிடித்து சுமூக சூழ்நிலையில் கிடைக்கக் கூடிய உரிமைகளை முறையாக பெறுவதில் உறுதியாக உள்ளோம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.