உலக நாடுகளுக்கு இந்தியா 2020ல் தலைமை தாங்கும்: பல்கலை கழக துணைவேந்தர் தகவல்!
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (17:17 IST)
உலக நாடுகளுக்கு 2020ல் தலைமை தாங்கும் தகுதியை இந்தியா பெறும் என பெரியார் பல்கலை துணைவேந்தர் தங்கராசு பேசினார்.
சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பெரியசாமி வரவேற்றார். விழாவில் பெரியார் பல்கலை துணைவேந்தர் தங்கராசு பேசியதாவது:
இந்தியா மிக வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. செல்போன் முதல் கொண்டு அனைத்து தொழில்நுட்பமும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பரவியுள்ளது. இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.
எந்த ஒரு நாட்டில் இளைஞர் சமூகம் தங்களை உணர்ந்து முன்னேற முயற்சி எடுக்கிறதோ அந்த நாடுதான் விரைவில் முன்னேற்றம் அடையும். அந்த வகையில் இளைஞர் வளம் அதிகமாக உள்ள இந்தியா உலக நாடுகளுக்கு 2020ல் தலைமை தாங்கும் தகுதியை பெறும்.அதற்கான ஆற்றலும், திறமையும் நம்மிடையே உள்ளது.
கடந்த காலத்தை விட தற்போது பட்டதாரிகளுக்கு அறிவுச்சூழல், சுற்றுச்சூழல் வாய்ப்புகள் ஆகியவை நல்ல நிலையில் உள்ளது. சமூகத்தில் உங்களை சார்ந்துள்ளவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நல்ல கல்வி அனைவரும் பெற உதவுங்கள். நீங்கள் வழிகாட்டி ஒரு இளைஞர் முன்னேறினாலே அது மிக முக்கிய சமூகத்தொண்டாகும் என்று துணைவேந்தர் தங்கராசு கூறினார்.