ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் மீது பா.ஜ.க குற்றச்சா‌ற்று!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (17:16 IST)
ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தவறான முடிவு எடுத்துவிட்டதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் கூறினார்.

ஈரோட்டில் பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில பார்வையாளர் வைரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் கவுரிசங்கர், மாநில சிறுபான்மையினர் அணி மாநில துணை தலைவர் அப்துல்ரகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உர தட்டுப்பாட்டை நீக்கி கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியங்கள் அனைத்தும் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி‌ன்ன‌ர் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், கர்நாடகா மாநிலம் பெங்களூரு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் போது தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்னையில் மத்தியில் தன் நிலையை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி தவறான முடிவு எடுத்துள்ளார்.

நாட்டில் இன்று பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. 70 சதவீதத்துக்கு மேற்பட்ட சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிலை நீடித்தால், வன்முறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏழை, பணக்காரன் இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டது.

ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் ஒரு விவசாயி வங்கியில் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. வங்கி கடன் தள்ளுபடி ஒரு கண்துடைப்புதான் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை வழங்க வேண்டும். ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்ற புள்ளிவிபரம் தவறானது. இது ஏமாற்றும் வித்தை எ‌ன்று ரமே‌‌ஷ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்