அரவாணிகள் நலவாரியத்தின் தலைவர், உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரவாணிகள் நலவாரியம் என்னும் புதிய அமைப்பினை உருவாக்கி, அதன் தலைவராக சமூக நலத்துறை அமைச்சரும், துணைத் தலைவராக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சிறப்பு ஆணையர் மற்றும் அரசு செயலாளரும் செயல்படுவார்கள்.
அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக, நிதித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவி, தமிழ்நாடு மனித உரிமை மற்றும் சமூக நீதி ஆணையத்தின் காவல்துறை தலைவர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சமூக நலத்துறை இயக்குநர் ஆகியோர் செயல்படுவார்கள்.
அலுவல் சார்பற்ற உறுப்பினர்களாக, சென்னை எஸ்.நூரி, காஞ்சிபுரம் பிரியாபாபு, சென்னை ஏ.ஜே.ஹரிஹரன், சென்னை செல்வி ஆர்.ஜீவா, விழுப்புரம் வி.சலீமா, வேலூர் எஸ்.கே.கங்கா, திருச்சி மோகனா, மதுரை எம்.காதர்மைதீன் என்னும் கனிமொழி ஆகியோரும் செயல்படுவார்கள். இவர்கள் அனைவரையும் நியமனம் செய்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.