மின்ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்காக பல விருதுகளைப் பெற்றாலும், மேலும் பல சாதனைகளை புரிய தமிழக அரசு தொடந்து முயற்சி மேற்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் புதிய கட்டிடம், தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் மையம், தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்பு மையம், தமிழ்நாடு மாநில தரவு மையம், பொது சேவை மையத் திட்டம், ராயப்பேட்டை மருத்துவமனையின் தொலை-மருத்துவ வசதி ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்று இவற்றை துவக்கி வைத்த முதல்வர் கருணாநிதி, தமிழகத்தின் கணினி மென்பொருள் ஏற்றுமதி 2007-08ம் ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
தேசியளவில் தகவல்தொழில்நுட்ப கொள்கையை வகுத்த முதல் மாநிலம் தமிழகம் என்றும், நாட்டின் தகவல் தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு வரும் 2011ம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா அமைந்ததன் மூலம் தமிழகம் இத்துறையில் முன்னிலை பெறும் என்றும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், வேலூர், ஓசூர் பகுதிகளில் விரைவில் தகவல்தொழில்நுட்பப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மின் ஆளுமை திட்டத்தில் முதலிடம் மற்றும் இத்திட்டத்தின் வெற்றிக்காக பல விருதுகளை தமிழகம் பெற்றிருந்தாலும், இதனால் திருப்தியடைந்துவிடாமல், மேலும் பல சாதனைகள் புரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.