தமிழக பா.ஜ.க. யாத்திரை!

புதன், 9 ஏப்ரல் 2008 (12:46 IST)
தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் தலைமையில் நடைபெற்று வரும் தாமரை யாத்திரை அடுத்ததாக சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூரில் நடைபெறுகிறது.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், மத்தியில் அத்வானி தலைமையில் பாஜக ஆட்சி அமையவும் ஆதரவுகோரி தாமரை யாத்திரை திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 10, 11, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமையில் நடைபெறும் யாத்திரை மார்ச் 2-ம் தேதி சேலத்தில் தொடங்கியது. தற்போது வேலூர் மாவட்டத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது. அடுத்ததாக 10-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் யாத்திரை நடைபெறவுள்ளது.

மே மாதம் 3-ம் தேதி மயிலையில் இந்த யாத்திரை நிறைவு பெறும். அங்கு மத்திய முன்னாள் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

திருவள்ளூரில் நடைபெறும் யாத்திரையில் மாநில பொதுச் செயலர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநிலப் பொருளாளர் கே.எஸ்.நரேந்திரன், அகில பாரத இணை அமைப்பாளர் (வர்த்தகப் பிரிவு) எம்.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்