ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த கோரியும் ஒகனேக்கல் பகுதி கர்நாடகா மாநிலத்திற்கு சொந்தம் என கூறி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சியினர் பிரச்சனை ஏற்படுத்தினர். தமிழ் சினிமா திரையிடப்பட்ட தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங்கம் தாக்கினர். கர்நாடகா சென்ற தமிழக பேருந்துகளை அடித்து நொறுக்கினர்.
இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கர்நாடகா அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தமிழகம் வந்த கர்நாடகா பேருந்துகள் தாக்கப்பட்டன. சென்னையில் உடுப்பி ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகாவுக்கு இயக்கப்படவில்லை. இதேபோல் கர்நாடகா அரசு பேருந்துகளும் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினமும் 5 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் கடந்த 4 நாட்களாக கர்நாடகாவுக்கு இயக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பதட்டநிலை தணிந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகா செல்ல இன்று கர்நாடகா காவல்துறையினர் அனுமதி வழங்கினர். அதன்பேரில் தமிழக அரசு பேருந்துகள் இன்று காலை முதல் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகின்றன.
இதனால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான தாளவாடி, சத்திய மங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதட்டம் தணிந்தது. மகிழ்ச்சியுடன் பயணிகள் கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.