கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பார்களா? ராமதாஸ்!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (10:15 IST)
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பார்களா? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க.வும் மற்ற எதிர்க்கட்சிகளும் தி.மு.க. அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற நிலையில் தோழமைக்கட்சியான பா.ம.க. நிறுவன தலைவர் மட்டும் குறை சொல்லியிருக்கிறார் என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றச்சாட்டை சுமர்த்தி இருக்கிறார். அவர் சுட்டிக்காட்டியிருக்கிற அ.இ.அ.தி.மு.க.வின் தலைவரும், வேறு சிலரும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து பார்த்ததற்கு பின்னரும் முதலமைச்சர் கருணாநிதி இப்படி கூறியிருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மட்டும் ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படும். ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைக்கிற வரையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் காத்திருக்க தான் வேண்டும் என்பதிலும் என்ன நியாயம் இருக்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவிரியிலிருந்து குடிதண்ணீர் கொண்டு வருவதற்கு இதில் பாதி அளவு நிதியே போதும், அப்படியிருக்கும் போது, ஜப்பான் நிதிநிறுவனம் உதவவேண்டும் என ஏன் காத்திருக்க வேண்டும்?
இந்த மாவட்டங்களை சேர்ந்த அப்பாவி மக்கள் மட்டும் என்ன பாவம் செய்து விட்டார்கள்? என்ற ஆதங்கத்தின் வெளிப்பாட்டில் தான் என்னுடைய கேள்வியாக எழுந்தது. சொன்னதை செய்வோம், செய்வதையை சொல்வோம் என்று இதுவரை சொல்லி வந்த முதலமைச்சர், இப்போது எதையும் சொல்வது சுலபம், செய்வது கடினம் என்று பேச ஆரம்பித்திருப்பது வியப்பாக இருக்கிறது.
கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடிந்து அங்கே புதிய அரசு பதவியேற்கும் வரையில் போராட்டத்தை கைவிடுவோம், அமைதி காப்போம் என்று முதலமைச்சர் திடீரென்று அறிவிப்பு செய்திருக்கிறார். இது சரியா? தவறா? என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை.
ஆனால், கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பார்களா? அதற்கு என்ன உத்தரவாதம்? இன்றைக்கு வெற்றிக்களிப்பில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் பதவிக்கு வந்ததும், இந்தப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்துக்கு போய் பிரச்சினையை இழுத்தடித்த வரலாறுகளுக்கு சொந்தக்காரர் தானே அவர்.
தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்ததும், ஒகேனக்கல் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்று முடிந்த மட்டும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தைக் கிடப்பில் போட முயற்சிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்? இவைகளுக்கெல்லாம் உறுதிமொழி பெறப்பட்டு இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் காலம் தான் சரியான நீதிதேவன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.