சென்னையில் பா.ஜ.க அலுவலகம் முற்றுகை : 100 பேர் கைது!
சனி, 5 ஏப்ரல் 2008 (16:46 IST)
சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு எடியூரப்பா கொடும்பாவியை எரித்த நூறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரத்துக்கு காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பா.ஜ.க தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.
இதில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.
தி.நகர் வைத்தியராமன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் காவல்துறையினர் அமைத்தினர். காவல்துறை துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 11 மணிக்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் தணிகாசலம் சாலையில் இருந்து பா.ஜ.க. அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர்.
அப்போது பா.ஜ.க அலுவலகத்தில் இருந்த மாநில துணை தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணை தலைவர் ஜெய்சங்கர், ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, 100 பேர் கொண்ட கூட்டம் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்தது. இதை தடுத்தி நிறுத்திய காவல்துறையனிர் அவர்களை கைது செய்தனர்.
இது தொடர்பாக பா.ஜனதா மாநில துணை தலைவர் குமாரவேலு கூறுகையில், எங்கள் கட்சி மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்கலாமே என்றார்.