என்.எல்.சி.யில் 1,620 தொழிலாளர்கள் கைது!
சனி, 5 ஏப்ரல் 2008 (16:13 IST)
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் இன்று மறியல் போராட்டம் நடத்திய என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 1,620 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 24 பேர் பெண்கள் ஆவர்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி போனஸ் வழங்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக போராட்டம் நடத்திய அவர்கள் பின்னர் உண்ணாவிரதம், மறியல் என நீடித்து வருகிறது. இன்று மறியல் போராட்டம் செய்த 1,620 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 24 பேர் பெண்கள் ஆவர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும் மறியல் செய்தனர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்று என்.எல்.சி. நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் இதை என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மறுத்துள்ளனர். ஒரு நாளைக்கு 2,490 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதில் தற்போது 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் இந்த தொடர் போராட்டத்தால் அங்கு 1,000 காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.