''தமிழகத்தில் நீர்வள ஆதாரம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படவேண்டும்'' என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த பேரவையின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.கிறிஸ்துராஜ் கூறுகையில், வறட்சி மற்றும் வெள்ளச்சேதங்களைத் தடுக்கவும், அழிந்துவரும் நீர்வள ஆதாரங்களை காப்பற்றவும் வேண்டுமென்றால், தமிழகத்தில் நீர்வள ஆதாரம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மனு அளிப்பதற்காக கையெழுத்து வேட்டையை நடத்திவருகிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 7 விழுக்காட்டை பெற்றுள்ள தமிழகத்துக்கு மொத்த நீர்வளத்தில் வெறும் 3 விழுக்காடு பங்கைத்தான் அனுபவிக்கிறோம்.
நம் மாநிலத்தின் வனப்பரப்பு 17.7 விழுக்காடுதான் என்ற நிலையில், பயனற்ற நிலப்பரப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சதுப்புநிலக் காடுகள் அழிப்பு, சுற்றுலா பயணிகளைக் கவருவதற்காக கடலோரப்பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள மண்திட்டுகளை அகற்றுதல், கடற்கரை மற்றும் ஆற்றுப் படுகைகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுதல் மூலமாக சுற்றுச்சூழலுக்கு நிரந்தர கேடு விளைகிறது. இதைத் தடுக்க பொதுப்பணி, வேளாண், தோட்டக்கலை, மீன்வளம் , வனம் மற்றும் தொழில் போன்ற அரசுத்துறைகள் முன்வர மறுக்கின்றன. இந் நிலையில் தன்பங்குக்கு கழிவுநீர் வடிகால் வாரியமும் சுற்றுச்சூழலைக் கெடுத்து வருகிறது என்று கிறிஸ்ராஜ் கூறினார்.