தாய்மை உணர்வு வேண்டும்: கம‌ல்ஹாசன்!

சனி, 5 ஏப்ரல் 2008 (11:40 IST)
"கத்தி எடு, வாள் எடு; போர் தொடு என்று சொல்வதிலும் நம்பிக்கை இல்லை. தாய்மை உணர்வு வேண்டும்'' என்றும் நடிகர் கம‌ல்ஹாசன் கூறினார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற திரை உலகினரின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் கம‌ல்ஹாசன் பேசுகை‌யி‌ல், மொழி தோன்றுவதற்கு முன்னால் கிட்டத்தட்ட குரங்குகள் உருவில் நாமெல்லாம் நதிக்கரையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தோம். அந்த அளவுதான் இன்றும் நடந்து கொண்டிருப்பது போல் ஒரு பிரமை. கர்நாடகத்தில் இருப்பவர்கள், கடந்து வந்த தண்ணீரை பற்றி கொஞ்சம் கவலை கொண்டிருக்கிறார்கள். கடந்து வந்த தண்ணீரை திரும்பி எடுத்துக்கொண்டு போக முடியாது.

இந்த போராட்டத்தில், அவர்கள் பக்கம் அர்த்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆனால், இங்கே நாம் பேசும்போது அதிக கோபத்தை நாம் பயன்படுத்தக்கூடாது என்பது எனது வேண்டுகோள். குனிந்தால் முதுகில் குதிரை ஏறிவிடுவார்களோன்னு பயந்துகிட்டு, நாம் நின்று கொண்டிருக்க முடியாது. முதுகில் ஏறினாலும் நிமிர்ந்தால் கீழே இறங்கி விடுவார்கள். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த கூட்டம் நாம் மத்திய அரசுக்கு சில விஷயங்களை சொல்கிற கூட்டமாக இருக்க வேண்டும். எனக்கு பல விஷயங்களில் நம்பிக்கை இல்லாதது போல் தோன்றுகிறது. கத்தி எடு, வாள் எடு; போர் தொடு என்று சொல்வதிலும் நம்பிக்கை இல்லை. தாய்மை உணர்வு வேண்டும். என்னது என்றாலும் ஆண்பிள்ளைத்தனம் குறைஞ்சு போய்விடும் என்று நினைக்க வேண்டாம். பெண் உறுப்பு இருந்தால்தான் தாய்மை உணர்வு வர வேண்டும் என்பதில்லை.

நாமே கூட யோசித்துப் பார்த்தால் நமக்கு அது வரும். நான் நடித்த `தேவர் மகன்' படத்தில்கூட ஒரு தாய் கதறுவது மாதிரி ஒரு வசனம் இருக்கிறது. நான்கொடுத்த பால் எல்லாம் ரத்தமாக ஓடுதுன்னு', அந்த மாதிரி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்காக தாயுள்ளம் கொண்ட கலைஞர்கள் வழிவகுக்க வேண்டும் என்று இருதரப்பு கலைஞர்களையும் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் எ‌ன்று கம‌ல்ஹாச‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்