3 தமிழ் தீவிரவாதிகள் உட்பட 8 பேர் கைது

வியாழன், 3 ஏப்ரல் 2008 (17:49 IST)
ஈரோடு அருகே கட்டபஞ்சாயத்து நடத்திக்கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டுடன் பதுங்கியிருந்த மூன்று தமிழ் தீவிரவாதிகள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பொலவக்காளிபாளையம். இங்குள்ள கருப்பணகவுண்டர் மற்றும் காளியண்ண கவுண்டர் ஆகிய இருவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்துவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் இறந்துவிட்டனர். இதன்பிறகு இவர்களுடைய மகன்களான வெங்கடாசலம் மற்றும் அன்பழகன் ஆகியோருக்கிடையே இந்த பிரச்சனை தொடர்ந்தது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அன்பழகனுக்கு சாதகமாக தீர்ப்பானது. இதனால் கொதிப்படைந்த வெங்கடாசலம் தமிழ் தீவிரவாதி சத்தியமூர்த்தியை அணுகியுள்ளார். இதை தொடர்ந்து புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி அன்பழகனை தொடர்புகொண்டு பிரச்சனைக்குறிய நிலத்தை வெங்கடாசலம் தனக்கு விற்றுவிட்டதாவும் இதற்கு அன்பழகன் ரூ. 10 லட்சம் பணம் கொடுக்கவேண்டும் என மிரட்டியுள்ளார்.

இது குறித்து அன்பழகன் அவரது அண்ணன் ஜோதியிடம் நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார். ஜோதி கொடுத்த ஆலோசனையின்பேரில் அன்பழகன் சத்தியமூர்த்தியை தொடர்புகொண்டு தான் சொல்லும் நாளில் வந்து பிரச்சனையை பேசி தீர்த்துவைக்கும்படியும் அதற்கு செலவாகும் பணத்தை தான்கொடுத்துவிடுவதாகவும் கூறினார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல்கொடுத்து நேற்று இரவு அவர்களை வரவைத்தனர்.

சத்தியமூர்த்தியும் ஜோதி வீட்டிற்கு இது குறித்து பேசவந்தார். தன் கூட்டாளிகளை அருகில் இருக்கும் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சத்தியமூர்த்தி மட்டும் வந்தார். உடனே பதுங்கி இருந்த காவல்துறையினர் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். அருகில் பதுங்கி இருந்த தமிழ்தீவிரவாதிகள் முத்துகுமார், ஜெயபிரகாஷ், வெங்கடாசலம், செல்வகுமார், ராஜேந்திரன், ஆறுமுகம், ரவிக்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து பெட்ரோல் வெடிகுண்டு, உருட்டுகட்டை, மிளகாய்பொடி உள்ளிட்டவைகள் கைபற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி, முத்துகுமார் ஆகியோர் சந்தனக்கடத்தல் வீரப்பன் சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்