''தமிழ்நாட்டில் 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மின் உற்பத்தி திறனை 7,808 மெகாவாட் அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்று மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) அதனுடைய மின் உற்பத்தி திறனை 7,808 மெகாவாட் அளவிற்கு உயர்த்தவும், மின் பகிர்மானத்தை விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
2007- 08ஆம் ஆண்டில் 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் எரிவாயு சுழலி மின்திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த மாதத்தில் இயக்கி வைக்கப்படும். மத்தியத் துறையில் தலா 220 மெகாவாட் திறனுடைய 2 கைகா அணுமின் நிலையம் கடந்த ஆண்டு இயக்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டு பங்காக 54 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் திட்டம் நிறுவ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே இடத்தில் மேலும் ஒரு 600 மெகாவாட் திட்டம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் திட்டத்தை நிறுவ ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
மேலும், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் திட்டமும், எண்ணூரில் 500 மெகாவாட் மின்திட்டமும் நிறுவ ஆயத்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.
இது தவிர கூட்டுத் துறையில் வடசென்னையில் 2,500 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை நிறுவவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.