அந்த கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதாவது: கர்நாடக முன்னாள் முதல்வரும், என் பால்ய நண்பருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக டெல்லி பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. பத்திரிகைகளில் அவர் அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் மூத்த அரசியல்வாதியாக கருதும் தமிழக முதலமைச்சர் தெரிவித்த சில கடுமையான வார்த்தைகள்தான் கர்நாடகாவில் எதிரொலித்து ஆரோக்கியமற்ற நிகழ்வுகள் நடக்க காரணமாகி விட்டது'' என்று கூறி உள்ளார்.
கர்நாடகாவுக்கு எதிராக நான் பொது இடங்களிலோ அல்லது 1-4-08 அன்று சட்டப் பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதோ எந்தவித கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் என் பேச்சுத் தொகுப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
என்னை முழுமையாக அறிந்தவர் என்ற முறையில், அத்தகைய எந்த கடுமையான வார்த்தைகளையும் நான் பேசி இருப்பேன் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள் அல்லது கற்பனை செய்து கூட பார்க்கமாட்டீர்கள் என்று எனக்கு மிகவும் உறுதியாக தெரியும். என்றாலும் எஸ்.எம்.கிருஷ்ணா சுட்டிக்காட்டியபடி உரையில் நான் என்ன பேசினேன் என்பதை இங்கு சுருக்கமாக தருகிறேன்.
"நாம் சகோதர மனப்பான்மையுடன் இருப்பவர்கள். நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடக்கூடாது என்ற கருத்தை உடையவன். சில சமூக விரோத சக்திகள் இதில் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றன. அவர்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக நான் பொறுமை காத்து வருகிறேன்''. இவ்வாறு தான் நான் பேசினேன்.
என்னுடைய பேச்சை 31-3-08 இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒகேனக்கல் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார். கர்நாடக அரசும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள சில அரசியல்வாதிகள், அரசியல் லாபத்துக்காக இந்த திட்டத்தை இழுத்து சதிச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது இந்த முயற்சி வெற்றி பெறாது என்று தமிழக முதலமைச்சர் கூறி உள்ளார். இவ்வாறு இந்து நாளிதழில் எழுதப்பட்டுள்ளது.
எனது இந்த பேச்சை கவனமாக கவனித்தால், என் வார்த்தைகளை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
அண்டை மாநிலம் ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்துகள் எரிக்கப்படும்போது, தமிழ் சினிமா தியேட்டர்கள் நொறுக்கப்படும்போது, பெங்களூர் தமிழ்ச்சங்கம் சூறையாடப்படும் போது, தமிழக மக்கள் நீங்காத பயத்துடன் வாழும் போது, முதலமைச்சர் என்ற முறையில் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழ்நாடு தன் உரிமைக்காக ஜனநாயகமுறைப்படி, சட்டத்துக்கு உட்பட்டே போராடி வருகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு பாராட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.