இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பேருந்து கட்டணம் குறைவு: நேரு!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:33 IST)
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பேருந்து கட்டணம் மிக, மிக குறைவு என்று சட்டப் பேரவையில் அமைச்சர் நேரு கூறினார்.
சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், மாநகர பேருந்துகளில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் 75 விழுக்காடு சிறப்பு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 5 விழுக்காடுதான் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறுகையில், ஸ்டேஜ்கள் அதிகப்படுத்தப்பட்டதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.
இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கூறுகையில், 43 கிலோ மீட்டராக இருந்த பயண தூரம் 50 கிலோ மீட்டராக அதிகரித்திருப்பதால் ஸ்டேஜ்கள் அதிகரித்திருக்கிறதே தவிர கட்டணத்தை உயர்த்துவதற்காக அல்ல. 20 கோடி கூடுதல் வருமானம் வந்ததற்கும் காரணம் அதிக பேருந்துகள் இயக்கியதன் காரணமாக அதிக பயணிகள் பயணம் செய்தது தான்.
இந்தியாவிலேயே மிக மிக குறைவான கட்டணம், அதிக பேருந்துகள் தமிழ்நாட்டில் தான். ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அதிக சம்பளமும் இங்கு தான். 18 முறை டீசல் விலை உயர்ந்தபோதும் கட்டணத்தை உயர்த்தாத மாநிலம் தமிழ்நாடு தான். 75 விழுக்காடு சிறப்பு பேருந்துகள் என்பது உண்மையானால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன், இல்லையென்றால் நான் சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நேரு கூறினார்.