2007-08-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ.674.91 கோடி நடைமுறை வருவாய் ஈட்டி 57.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுக கழகத் தலைவர் கே.சுரேஷ் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் 2007-08-ம் ஆண்டு சாதனை குறித்து அதன் தலைவர் சுரேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2007-08-ம் நிதியாண்டில் சென்னை துறைமுகம் கடந்த ஆண்டு சாதனையான 53.41 மில்லியன் டன் சரக்குகளை காட்டிலும் 7 சதவீதம் கூடுதலாக கையாண்டு மொத்தம் 57.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதில் அரசின் இலக்கு 55.86 மில்லியன் டன் மட்டுமே.
இதில் ஏற்றுமதி சரக்குகள் 24.31 மில்லியன் டன், இறக்குமதி சரக்குகள் 34.82 டன்னாகும். ஏற்றுமதி சரக்குகளால் கடந்த ஆண்டைவிட 5.67 சதவீதமும் இறக்குமதி சரக்குகளால் 7.78 சதவீத சரக்குகளும் கூடுதலாகியுள்ளது.
இந்த நிதியாண்டில் 12.79 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்கள் கையாளப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 12.94 மில்லியன் டன்னாக இருந்தது.
பெருகி வரும் சரக்கு பெட்டக போக்குவரத்து பாதுகாப்பிற்கு ஈடுகொடுத்திட ஒரு சரக்கு பெட்டக நிரந்தர (ஸ்கேனர்) நுண்கதிர் ஆய்வு படக் கருவியும் மற்றொரு நகரும் நுண்கதிர் ஆய்வு படக் கருவியும் 2008 செப்டம்பரில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தின் கிழக்கு துறை மற்றும் தெற்கு துறை 3 ஆகியவற்றில் ரூ.491.76 கோடி செலவில் இரண்டாவது சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் 2009 ஏப்ரலில் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படத் துவங்கிய பிறகு படிப்படியாக சென்னை துறைமுகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் டி.இ.யு.எஸ் கையாளப்படும்.
ரூ.200 கோடி செலவில் சென்னை துறைமுகம் நவீனமயமாக்கப்படவுள்ளது. துறைமுக நுழைவு வாயில் எண்.1 முதல் 10 வரைவுள்ள அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்படவுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் துறையில் உள்ள உள்துறைமுக நீர்ப்பகுதி நவீனப்படுத்தப்பட்ட கிழக்கு துறை மற்றும் தெற்கு துறை-3 ஆகியவைகளும் -15.5 மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தப்படவுள்ளது.
பதினோராவது திட்டத்தில் சென்னை துறைமுகம் பாரதி துறையின் வளர்ச்சி பகுதி வளர்ச்சிக்கு ரூ.4500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட மதிப்பில் ரூ.3100 கோடி செலவிலான மெகா டெர்மினலும் அடங்கும். இன்னும் ஐந்தாண்டுகளில் இந்த மெகா டெர்மினல் செயல்படத் துவங்கும்.
சென்னை துறைமுகத்தில் சார்பில் ரூ.40 கோடி செலவில் திருநெல்வேலி மாவட்டம் வேப்பிலாங்குளம் கிராமத்தில் 7.5 மெகாவாட் திறன் மின் உற்பத்தி காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளது.
சரக்கு பெட்டகங்கள் கையாளுவதில் 27 சதவீதம் கூடுதலாக அதாவது 11,28,108 டி.இ.யு.எஸ் கையாளப்பட்டுள்ளது. இது டன் அளவில் 18.05 மில்லியன் டன்களாகும்.
2007-08-ம் ஆண்டில் 10.82 மில்லியன் டன் பலரக இரும்புத் தாதுகள் கையாண்டுள்ளது.
கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் மின்சார வாரிய மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 7.97 மில்லியன் டன்களும் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளும் 1.66 மில்லியன் டன் அளவிற்கு சென்னை துறைமுகம் கையாண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் கையாண்ட 1,14,756 கார்களை கடந்து இந்த நிதியாண்டில் 1,37,971 கார்களை கையாண்டு சாதனைப்படைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 20.23 சதவீதம் அதிகமாகும்.
ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சிக்காக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஜீபுரூக் துறைமுகத்துடன் சென்னை துறைமுகம் 20.09.2007 அன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் ஐரோப்பா மற்றும் வடசீன நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.