வெள்ள சேத‌ம்: மத்திய நிபுணர் குழு அடுத்த வாரம் த‌மிழக‌ம் வருகை!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:04 IST)
தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழஅடுத்த வாரம் வருகிறது.

கட‌ந்த மாத‌த்‌தி‌ல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல‌த்த மழை பெ‌ய்தது. இதனால் அம்மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு, அதிக அளவில் பயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட வெள்ளப்பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டன‌ர். அதன்பிறகு நட‌ந்த அமைச்சரவை கூட்ட‌த்‌தி‌ல், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விவரங்களை பற்றி முதலமைச்சர் கருணாநிதிக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அமைச்சர்கள் விளக்கமாக எடுத்து கூறின‌ர். வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌‌ள் அனு‌ப்‌பிய அறிக்கையில் இருந்து விவரங்கள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் பயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்ன, எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், எத்தனை கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் உள்ள குடிசைகள்-குடியிருப்புகளுக்கு வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் எவ்வளவு.

உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? மாவட்டத்தில் எத்தனை சாலைகள், எவ்வளவு தூரத்துக்கு பாதிப்படைந்துள்ளன என்பது பற்றிய தொகுப்பு மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய நிபுணர் குழு அடுத்த வாரத்தில் த‌மிழக‌த்‌தி‌ற்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள், பல குழுக்களாக பிரிந்து தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுகிறார்கள்.

பின்னர் டெல்லி திரும்பி, தாங்கள் தயாரித்த வெள்ள சேதம் பற்றிய அறிக்கைகளை மத்திய அரசிடம் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் ம‌த்‌திய அரசு நிதி உதவி அளி‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்