நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நீதிமன்ற உத்தரவு படி 8.33 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும். சீனியாரிட்டி முறையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 29ஆம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நடக்கிறது. இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணாவிரதம் குறித்து ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொருளாளர் இளஞ்செழியன் கூறுகையில், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.