நாகர்கோவிலில் ஏப்ரல் 26ஆம் தேதி நிறைவடையும் ரதயாத்திரையையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எல்.கே.அத்வானி கலந்து கொள்கிறார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி பிரசார பயணமாக ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
பொள்ளாச்சியில் இருந்து கன்னியாகுமரிவரை பிரசார யாத்திரை சென்று கொண்டிருக்கிறார் மாநில துணை தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். நாகர்கோவிலில் ஏப்ரல் 26ஆம் தேதி யாத்திரை நிறைவடைகிறது. இதையொட்டி அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அத்வானி பேசுகிறார்.
இந்தியா முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எதிர்க்க வேண்டிய கட்சிகள் எல்லாம் கூட்டணிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதால் மக்கள் பிரச்சினைகளை கைவிட்டு விட்டன. கம்யூனிஸ்டு கட்சிகள் பதவி பலன்களை கடைசி வரை அனுபவித்து விட்டன.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 3-வது அணி என்று நாடகமாடி ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரசுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளன. எத்தனை நாள்தான் மக்கள் இந்த நாடகத்தை ரசிப்பார்கள். விலை வாசி உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று இல.கணேசன் தெரிவித்தார்.