தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 15ஆம் தேதி முதல் அமல்!
திங்கள், 31 மார்ச் 2008 (10:23 IST)
மீன்வள பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக திகழ்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களின் பொருளாதாரத்தில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆண்டு முழுவதும் மீன்பிடி தொழில் நடைபெறுவதால், மீன்வளம் பாதிக்கப்படுவதை தடுக்கவும், மீன்களின் பெருக்கத்துக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடை ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 30 வரை 45 நாட்கள் அமலில் இருக்கும். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது. அதே நேரத்தில் என்ஜின் பொருத்திய நாட்டுப்படகுகள், சிறு படகுகள், வத்தைகள், கட்டுமரங்கள் போன்றவை வழக்கம் போல் மீன்பிடிப்பில் ஈடுபடும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதில் ராமேசுவரம் தீவில் மட்டும் ஆயிரம் விசைப்படகுகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 30 வரை கடலுக்கு செல்ல முடியாது என்பதால், மாற்று தொழிலில் ஈடுபட மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.