இ‌ந்‌தியா‌வி‌ன் ஒ‌‌ற்றுமையை கா‌ப்பா‌ற்று‌ங்க‌ள், பல‌வீன‌ப்படு‌த்தா‌தீ‌ர்க‌ள்: கருணாநிதி!

திங்கள், 31 மார்ச் 2008 (10:17 IST)
''வெறும் தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர்விட்டு கேட்கிறேன், இந்தியாவின் ஒற்றுமையை காப்பாற்றுங்கள். இந்தியாவை பலவீனப்படுத்தாதீர்கள்'' என்று முத‌லமைச்சர் கருணாநிதி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை மாநகராட்சி சார்பில் நட‌ந்த வடக்கு உஸ்மான் சாலை- மகாலிங்கபுரம் சாலை மேம்பாலம் முதலமைச்சர் கருணாநிதி ‌திற‌ந்து வை‌த்து பேசுகை‌யி‌ல், செ‌ன்னை மாநகர பாலங்கள் கட்டியதால் என்மீது விழுந்த ரத்தக் கோடுகள் எத்தனை என்று உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். பார்த்திருக்க மாட்டீர்கள். அத்தகைய ரத்தக் கோடுகளை டி.ஆர்.பாலு, ஸ்டாலின், மாறன் ஆகியோர் ஏற்றுக் கொண்டு, பரவாயில்லை-மக்கள் நேரடியாக தர வேண்டிய பரிசை மக்களுக்காக ஆட்சி நடத்துவதாக சொல்லுபவர்கள் சிலர் தந்திருக்கிறார்கள் என்று நன்றி தெரிவித்தோமே தவிர, நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பழிவாங்கும் எண்ணமில்லாமல் அவர்களுக்கு பரிசு அளித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் அண்ணா வழி என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கர்நாடகத்தில் இருக்கின்ற ஒரு பிரகஸ்பதி ஒரு கட்சித் தலைவர், ஜனதா கட்சித் தலைவர், அவர் தேர்தலில் நிற்க வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் திட்டத்தை இங்கு கட்டக்கூடாது. ஒகேனக்கல் எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லுகிறாரே, அதற்கு துரைமுருகனை விட்டு என்னால் பதில் சொல்ல முடியும்.

அதேநேரத்திலே கர்நாடகத்தில் இருப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். எதை, தமிழகம் உரிமையோடு செய்ய நீங்கள் வழிவிட்டீர்கள். காவிரியில் இடைஞ்சல். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு, கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற்று மத்திய அரசும் சம்மதம் கொடுத்து நிறைவேற்றப்படுகின்ற திட்டம்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். எங்களுக்கு குடகில் இருந்து வருகின்ற தண்ணீர்தான் இல்லையென்றால், குடிநீருக்காகப் பயன்படும் ஒகேனக்கல் தண்ணீரும் கிடையாது என்று சொன்னால், என்னாவது?

இன்று மாலைப் பத்திரிகைகளில் எல்லாம் கொட்டை எழுத்து செய்திகள்-தமிழ்நாட்டு பஸ்களை எல்லாம் உடைப்போம், உள்ளே விடமாட்டோம். ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழ்நாட்டு பஸ்களை எல்லாம் உடைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். பஸ்களை அல்ல, எங்களது எலும்புகளை உடைத்தாலும் சரி. நாங்கள் அதற்காக கவலைப்படப் போவதில்லை. நிச்சயமாக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.

கேரளாவுக்கும் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தது உண்டு. அப்போதெல்லாம் இருமாநில ஒற்றுமை, அங்கு வாழ்பவரும் நாம்தான். இங்கு வாழ்பவர்களும் சகோதரர்கள்தான். யாரோ சில சமூக விரோதிகள் இதை பெரியதாக ஆக்கி தீப்பற்றச் செய்துவிடுவார்கள் என்பதால்தான் பொறுமையாக இருந்து வருகிறேன். இதனுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையை மத்திய அரசு உணரும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு.

இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இன்றைக்கு அங்கே சிறு துளியாக இருக்கின்ற பகை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பொறி பெருந் தீயாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் இந்தியாவினுடைய ஒற்றுமையின், ஒருமைப்பாட்டின், இறையாண்மையின் பெயரால் கேட்கிறேன். வெறும் இந்த தண்ணீருக்காக மாத்திரமல்ல, கண்ணீர்விட்டு கேட்கிறேன்-இந்தியாவின் ஒற்றுமையை காப்பாற்றுங்கள். இந்தியாவை பலவீனப்படுத்தாதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்