சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பதிலில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தடுப்பணை கட்டப்பட்டு ரூ.63 கோடியே 41 லட்சம் செலவில் புதிய நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக வனத்துறையிடமிருந்து 7.1 ஏக்கர் நிலம் பெற வேண்டியது உள்ளது. அதற்கு மாற்றாக 14.2 ஏக்கர் நிலம் தமிழக அரசு கொடுக்க வேண்டி இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும்.
ஒகேனக்கல் நீர்மின் திட்டம் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் காவிரி பிரச்சினை தீராததை காரணம் காட்டி கர்நாடக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் ஒரு சில மின் திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.
இரு மாநில திட்டங்களையும் மத்திய நீர்மின் உற்பத்தி நிறுவனம் ஏற்று மின் உற்பத்தி செய்ய முன்வந்துள்ளது. ஆனால் மின்சாரத்தை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்படவில்லை. இது குறித்து மத்திய அமைச்சர் ஹிண்டே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.